×

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாத தயாரிப்பு கூடங்களை நவீனப்படுத்த முடிவு: புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை


மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு பிரசாதம் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், பிரசாதம் தயாரிப்பு கூடங்களை நவீன முறையில் மாற்றி அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மதுரையில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர், வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொள்கின்றனர். கோயிலில் அம்மன் தரிசனத்திற்கு பிறகு வெளியில் வரும் பக்தர்களுக்கு நிர்வாகம் சார்பில் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கோயிலில் புளியோதரை, பொங்கல், அப்பம், வடை என பிரசாதம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பிரசாதங்களை பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இவற்றில் லட்டு மட்டும் மாதந்தோறும் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு விற்பனை.. கோயிலில் தயாரிக்கப்படும் அனைத்து வகை பிரசாதங்களும் ஆண்டுதோறும் ரூ.6 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் கோயில் வளாகத்தில் தெற்குப் பகுதியில் தயாரிக்கப்பட்டு, ஸ்டால்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதிகாலை முதலே பிரசாதம் தயாரிக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலில் முதற்கட்டமாக விறகு அடுப்புகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். பிரசாதம் தயாரிக்கும் அறைகள் மிகவும் சிறிய அளவில் உள்ளன.

இதனால், அதிக வெப்பம் காரணமாக கட்டிடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க கம்பிகளை பொருத்தியுள்ளனர். எனவே, பிரசாத கூடங்களை நவீன முறையில் மாற்ற வேண்டும் என பக்தர்களும், ஐகோர்ட் மதுரை கிளையும் வலியுறுத்தியுள்ளது. இதன்படி கோயில் வளாகத்தில் பல இடங்கள் உள்ள நிலையில் பிரசாத தயாரிப்பு இடத்தை மாற்றம் செய்து, மாடல் கிச்சன் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரு நாளில் 15 சிலிண்டர்கள் பயன்பாடு…
இது குறித்து ஆன்மிக ஆர்வலர் முத்து கண்ணன் கூறுகையில், ‘‘உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மிக சிறப்பாக பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை தயாரிக்க தற்போது வரை நவீன இயந்திரங்கள் இல்லை. சிறு கோயிலான அழகர்கோயிலில் கூட புளியோதரை தயாரிக்க மெஷின் வந்துள்ளது. இதுபோல் மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு தயாரிக்க மட்டுமே சிறிய அளவில் மெஷின் உள்ளது. மேலும் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் போதுமான இட வசதி இல்லை. பழைய கட்டிடத்தில் பணியாளர்கள் மிகவும் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும் 10 முதல் 15 சிலிண்டர்கள் வரை பிரசாதம் தயாரிக்க பயன்படுத்துவதால், அந்த வளாகம் முழுவதும் வெப்பம் எளிதாக தாக்கி வருகிறது. எனவே, கும்பாபிஷேக பணிகளுடன் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தையும் நவீன முறையில் மாற்றி அமைக்க வேண்டும்.

இதன் வாயிலாக பக்தர்களுக்கும், பணியாளர்களும் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறும்போது, ‘மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க, மேற்கு கோபுரம் திருக்கல்யாண மண்டபம் பகுதி மற்றும் கோயிலுக்கு சொந்தமான பிர்லா தங்கும் விடுதிக்கு அருகில் போதிய இட வசதி உள்ளது. இப்பகுதிகளில் நவீன இயந்திரங்களுடன் பிரசாதம் தயாரிக்கும் பகுதியை அமைக்கலாம். அங்கு பிரசாதம் தயார் செய்து கோயிலில் விநியோகம் செய்யலாம். பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் வராது. எனவே, கோயில் நிர்வாகம் இதில், கவனம் செலுத்த வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அறநிலையத்துறை சார்பில் மீனாட்சியம்மன் கோயில் பிரசாத தயாரிப்பு கூடங்களை நவீன முறையில் மாற்றி அமைக்கவும், விசாலமான இடத்தில் பிரசாத தயாரிப்பு பகுதியை ஏற்படுத்தவும், பிரசாத தயாரிப்பிற்கென நவீன கருவிகள் கொள்முதல் செய்யயவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. உரிய அரசு அனுமதிக்குப்பிறகு இதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படும்’’ என்றார்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாத தயாரிப்பு கூடங்களை நவீனப்படுத்த முடிவு: புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Prasada ,Meenatsiyamman Temple ,Madurai ,Madurai Meenatsiyamman Temple ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி